தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. அதிமுக ஒருபுறம் உட்கட்சி பூசலை சமாளிக்க போராடி வருகிறது. திமுக கோட்டையில் எந்த உட்கட்சி சலசலப்பும் இல்லையென்றாலும் ஆட்சி காலத்தில் நடந்த சில கொலைகளும் என்கவுண்டர்களும் லாக்கப் டெத் விவகாரங்களும் அமைச்சர்களின் அத்துமீறிய பேச்சுக்களும் மக்கள் மத்தியில் பேசு பொருளாகி கடும் விமர்சனத்தை திமுக சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தான் திமுக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2-ம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘ஜூன் முதல் வாரத்தி்ல் இருந்து, கழக நிர்வாகிகளை தொகுதிவாரியாக அண்ணா அறிவாலயத்தில் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரிவாக ‘ஒன் டூ ஒன்’ பேசுவோம்’’ என்று அறிவித்திருந்தார். திமுக ஆட்சி குறித்து மக்களின் மனநிலையை அறியும் விதமாகவும், தொகுதி கள நிலவரம் போன்றவற்றை அறியும் விதமாகவும் திமுக நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த திட்டமிதிருந்த முதலவர் மு. க. ஸ்டாலின் ‘உடன்பிறப்பே வா ‘என்ற தலைப்பில் நிகழ்ச்சியை தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக இதுவரை 24 தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியாக கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில், இன்று பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை ஆகிய 3 தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். 3 தொகுதிகளை சேர்ந்த நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், பேரூர் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.