கருணாநிதியை போன்று “மூச்சு உள்ளவரை நானே தலைவர்” – பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக தலைவர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இடையே கட்சி பொறுப்புகள் அதிகாரம் ஆகியவற்றில் நிலவி வரும் கருத்துவேறுபாடு மற்றும் அதிகார மோதலால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
பாமக தளவர் ராமதாஸ் அன்புமணிக்கு தலைமைக்கான பண்பு இல்லை என முன்னதாக விமர்சித்திருந்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அன்புமணி தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளட்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனது மூச்சு இருக்கும்வரை பாமக தலைவராக பதவியில் தாமே தொடரப்போவதாக தெரிவித்துள்ளார் ராமதாஸ் திமுகவில் ஸ்டாலின் எப்படி பொறுமையாக இருந்தாரோ அவ்வாறு அன்புமணியும் பணியாற்ற வேண்டுமென கூறியதோடு, “இந்தக் கட்சிக்கு என் மூச்சு இருக்கும்வரை நான்தான் தலைவர். அன்புமணிக்கு செயல்தலைவர் பதவி கொடுத்திருக்கிறோம். இது மறைந்த என் நண்பர் கலைஞரின் பாணி. அவர் 94 வயது வரை கட்சிக்கு தலைவராக இருந்தார். இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அப்போது முணுமுணுக்கவில்லை. அன்புமணிக்கு செயல்தலைவர் பதவி கொடுத்திருக்கிறோம். கட்சியின் வளர்ச்சிக்கு செயல்தலைவர் மிகமிக முக்கியம். அன்புமணி அதை ஏற்க மாட்டேன் என சொல்கிறார்”
எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு, ஆனால் அன்புமணியுடனான கருத்துவேறுபாட்டிற்கு இன்னும் முடிவு கிடைக்கவில்லை எனக் கூறிய ராமதாஸ், எனினும் சமரசப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாமகவில் தான் நியமிக்கும் பொறுப்பாளர்களே நிரந்திரமானவர்கள் எனக் கூறியதுடன், 2026 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படுமென ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தந்தை மகன் மோதலால் பாமக இரண்டாம் கட்ட தலைவர்களும் தொண்டர்களும் அதிர்ந்து கிடக்கின்றனர்.