கோவில் காவலாளியை அடித்து கொன்ற போலீஸ் – 18 இடங்களில் கொடுங்காயம் அதிரவைக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்


கோவில் காவலாளி அடித்து கொலை.. போலீசார் மீது கொலை வழக்கு.!தொடரும் லக்கப் மரணங்கள்..

சமீப காலமாக காவல்துறையின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திருக்கு உள்ளாகி வருகிறது. விசாரணையின் போது தரக்குறைவான வார்த்தைகள் தாக்குதல்கள் கட்டப்பஞ்சாயத்துகள் கணக்கு காண்பிப்பதற்காக வழக்குகள் சிறு குற்றவாளிகள் மீது தேவையற்ற குண்டர்தடுப்பு சட்ட வழக்குகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படவேண்டியவர்கள் மீது சாதாரண வழக்குகளை போட்டு காப்பாற்றுவது என பல்வேறு சர்ச்சைகள் தற்போது மீண்டும் ஒரு ‘லாக்கப் டெத்’

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மதுரையைச் சேர்ந்த சிவகாமி என்ற முதிய பெண்மணி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அவர் வயது முதிர்ந்தவர் என்பதால் கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவர் வீல் சேர் கொண்டு வந்து கொடுத்து உதவியுள்ளார். அப்போது சிவகாமியின் குடும்பத்தினர் அஜித்திடம் கார் சாவியைக் கொடுத்து காரை பார்க் செய்யுமாறு கூறியுள்ளனர். காவலாளி அஜித்தும் அவர்களுடைய காரை பார்க் செய்துவிட்டு வந்து சாவியை கொடுத்துள்ளார், பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த சிவகாமி குடும்பத்தினர் காரில் இருந்த 10 பவுன் நகையைக் காணவில்லை எனத் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் காவலாளி அஜித்குமாரை அழைத்துச் சென்று கோவில் அலுவலகத்திலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையிலும் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக அஜித்தின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு புறம் கோவிலுக்கு அருகே உள்ள பகுதியில் கோவிலின் செயல் அலுவலகத்தில் வைத்துக் குற்றப்பிரிவு போலீசார் அஜித்குமாரை பைப்புகளால் கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் பைப்புகள் உடைந்து சிதறி கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்த சம்பவம் காரணமாகக் கோவிலைச் சுற்றியுள்ள வியாபாரிகள் போலீஸாரின் முறையற்ற விசாரணையை கண்டித்து கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவகாரம் தொடர்பாகத் தனிப்படை காவலர்கள் 6 பேரை மாவட்ட எஸ்பி ஆசித் ராவத் சஸ்பெண்ட் செய்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தரப்பில் விசாரணையின் போது அஜித் குமாரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாகவும், விசாரணையில் காரை யார் பார்க்கிங் செய்தனர் என கேட்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக மூன்று நபர்களின் பெயர்களை கூறினார் எனவும் எஃப் ஐ ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சரவணன், பிறகு அருண், பின்னர் தினகரன் எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர்களை அழைத்து விசாரித்த போது, அவர்கள் யாரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்றும், காரின் சாவி முழுமையாக அஜித்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்றும் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அஜித் குமாரின் தம்பி நவீனை விசாரிக்கக் கொண்டு செல்லப்பட்டபோது, அஜித்தான் நகையை எடுத்ததாகவும் மேலும், திருடிய நகைகளை கோவிலுக்குப் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அங்கு சென்று போலீசார் தேடியபோதும் நகைகள் எதுவும் கிடைக்கவில்லை என முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

ஆனால் மாட்டுக்கொட்டகையில் வைத்து அஜீத்குமாரை போலீசார் கடுமையாக அடித்து சித்ரவதை செய்துள்ளனர். கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் ரத்தக்காயங்களுடன் 28.06.2025 மாலை 06.45 மணிக்கு அஜீத் குமார் படுகாயமடைந்து உயிருக்கு போராடியிருக்கிறார்.

ஆனால் போலீசார் விசாரணையின் போது தப்பியோடிய போது வழுக்கி விழுந்து அடிபட்டுவிட்டதாக கூறி தலைமைக்காவலர் பிரபு மற்றும் சில காவலர்கள் படுகாயமடைந்த அஜீத்குமாரை ஆம்புலன்ஸில் ஏற்றி முதலில் முதலில் திருபுவனம் மருத்துவமனைக்கும் பின்னர் சிவகங்கை மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர் சிவகங்கை மருத்துவமனை மருத்துவர்கள் கையை விரித்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அஜீத்குமாரை பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்னையில்  காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் HC- 760 பிரபு மற்றும் Gr 1- 870 ஆனந்த். Gr 1- 1033 ராஜா, Gr 1-735 சங்கரமணிகண்டன் மற்றும் ஒரு காவலர் மீதும் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த லாக்கப் மரணம் குறித்து மதுரையில் நீதிபதி வேங்கடப்பிரசாத் அவர்கள் அஜித்குமாரின் தம்பி, அக்கா மற்றும் அவரது அம்மா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடமும், உறவினர்களிடமும் விரிவான விசாரணை நடத்தினார். இதற்கிடையில், அஜித்குமார் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. நீதிபதி வேங்கடபிரசாத், அஜித்குமாரின் உடலில் இருந்த காயங்கள் அனைத்தையும் விபரமாக குறிப்பெடுத்துக் கொண்டார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேன்டும் என உயிரிழந்த அஜித் குமார் சார்பில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பு (30-06-25) அன்று முறையீடு செய்தனர். அப்போது காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, ‘கடந்த 4 ஆண்டுகளில்  24 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த நபர் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினால் தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை ஏற்கலாம். ஆனால் ஒரு சாதாரண சந்தேக வழக்கில் அவரை விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன் என தெரியவில்லை.? இதனை பாதிக்கப்பட்டோர் மனுவாக தாக்கல் செய்யுங்கள், விசாரணைக்கு எடுக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த அஜித் குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. வழக்கமாக ஒரு மணி நேரமே பிரேத பரிசோதனை நடப்பதாகக் கூறப்படும் நிலையில், ஐந்து மணி நேரம் வரை நடைபெற்றுள்ளது. பின்னர் அஜித் குமாரின் உடல் காவல் துறையினர் பாதுகாப்புடன் மடப்புரம் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் குமார் உடலில் 18 இடங்களில் பெரிய அளவில் காயங்கள் இருந்துள்ளது. அஜித் குமாரின் மண்டை ஓடு தொடங்கி கை, முதுகு, கால்களின் பாதங்கள் உள்ளிட்ட இடங்களில் கடுமையான காயங்கள் இருந்துள்ளன. உடலின் வெளிப்புறம் மட்டும் இல்லாமல் உள்புறங்களிலும் ரத்தக் கசிவு உள்ளிட்ட கடுமையான காயங்கள் இருந்தது. அஜித் குமாரின் கழுத்துப் பகுதியில் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் கழுத்தின் சங்கு பகுதியில் ஏற்பட்ட ஆழமான காயத்தால் அஜித் குமார் உயிரிழந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அதேபோல உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக் கசிவு ஆகியவை கூட மரணத்திற்கு வழிவகுத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடுமையான சித்திரவதையை அவர் அனுபவித்திருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேத பரிசோதனை முடிவுகள் காவலர்களால் அஜித்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது

இந்த வழக்கில் உதவி ஆய்வாளர் தயார் செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் காவலர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆய்வாளர் ஆய்வாளர் காவல் துணை கண்காணிப்பாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்புவதுடன் விரிவான முறையான விசாரணை தேவை என்கிறனர் அப்பகுதி மக்கள்.


Related posts

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்தை தொடர்ந்து விசாரணை வளையத்தில் நடிகர் கிருஷ்ணா.!

Admin

தொடரும் வரதட்சணை மரணங்கள்….நிதன்யா வை அடுத்து ஜெபிலா மேரி…

Ambalam News

அஜீத்குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Ambalam News

Leave a Comment