வழிப்பறி குற்றவாளியிடம் பறிமுதல் செய்த பணத்தை சுருட்டிய ‘’பலே பெண் இன்ஸ்பெக்டர் ’’ – ஆயுதபடைக்கு மாற்றி அதிரடி காட்டிய கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார்..



கடலூர் மாவட்டத்தில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளை கண்டறிந்து, வேறு மாவட்டங்களுக்கு தூக்கியடித்து அதிரடி காட்டி வருகிறார் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார். இதன் காரணமாக கடலூரில் பணியாற்றும் சில லஞ்ச போலீசார் அச்சத்தில் தங்கள் நடவடிக்கையை மாற்றிக் கொண்டுள்ளனர். ‘’லஞ்சம் வாங்குவதற்கு பிச்சை எடுக்கலாம்’’ என்கிற ரீதியில் ஓப்பன் மைக்கில் பேசி கடலூர் காவல்துறை அதிகாரிகளை அலற விட்டவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்.
இந்நிலையில், ஒரு பெண் காவல் ஆய்வாளர் எந்த பயமமும் இன்றி, வழிப்பறி வழக்கில் கைதான குற்றவாளி ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்ட 75 ஆயிரம் ரொக்க பணத்தை சுருட்டி, உயர் அதிகாரிகளுக்கு தண்ணி காட்டியுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு இந்த சம்பவம் தெரிய வந்த நிலையில், அந்த பெண் ஆய்வாளர் பிருந்தா மீது விசாரணையை தொடங்க உத்தரவிட்டிருக்கிறார்.
திட்டக்குடி அருகே உள்ள கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் 60 வயதான அம்மணியம்மாள் என்பவர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைக்கு செல்வதற்காக கொரக்கவாடி To பனையந்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பெரம்பலூர் மாவட்டம் கீழபுலியூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் லிப்ட் கொடுப்பதாக கூறி, அம்மணிம்மாளை மோட்டார் சைக்கிளில் ஏரிக்கரைக்கு பகுதிக்கு அழைத்துச் சென்று அவர் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபாகரனை கைது செய்து அவரிடம் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆனால் இந்த பறிமுதல் சம்பவத்தில் பிரபாகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.75 ஆயிரத்தை கணக்கில் கொண்டு வராமல் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் பிருந்தா கையாடல் செய்ததாக எஸ்.பி.ஜெயக்குமாருக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் காவல்துறை உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இன்ஸ்பெக்டர் பிருந்தா குற்றவாளியிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.75 ஆயிரம் பணத்தை கையாடல் செய்தது உண்மை என்று தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தாவை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமா உத்தரவிட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
வழிப்பறி வழக்கில் கைதானவரிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.75 ஆயிரத்தை கையாடல் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் சம்பவம் கடலூர் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பிருந்தா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குள்ளஞ்சாவடி பகுதியில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, அவர் அங்கிருந்து ராமநத்தம் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையில் சர்ச்சையான இன்ஸ்பெக்டராகவே வலம் வந்திருக்கிறார் பிருந்தா.
ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை கடலூர் மாவட்ட மக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.


banner

Related posts

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் – கையும் களவுமாக சிக்கிய விஏஓ கைது

Admin

ராமநாதபுரம் சமஸ்தான ‘’போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்’’ விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

Admin

திமுகவுடன் கூட்டணி… தேமுதிக, ஓபிஎஸ், விசிக, மதிமுக தொண்டர்களின் கருத்து என்ன.?  – கள ஆய்வு…

Ambalam News

Leave a Comment