தூய்மைப்பணியாளர் வரலட்சுமி மரண விவகாரம் – மின் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமா.? தமிழ்நாடு அரசு..



மழைக்காலம் ஆரம்பிக்கவே இல்லை. தற்போதுதான் எட்டிப் பார்த்திருக்கிறது. மூன்று நாள் பெய்த மழையிலேயே, மின்சார வாரியத்தின் மெத்தனப்போக்கு ஒரு பெண் தூய்மைபணியாளரின் உயிரை காவுவாங்கி இருக்கிறது. அதுவும் இந்த சம்பவம் எங்கே நடந்திருக்கிறது என்று பார்த்தால்.? சென்னையை விட்டு ஒதுக்கி ஓரமாக வைக்கப்பட அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியில்தான் இந்த கோர சம்பவம் நடந்திருக்கிறது. ”இதுக செத்தா யார் கேட்கப் போறாங்க”.? கேட்க யார் இருக்கா”.? என்ற மெத்தனப்போக்கில்தான் தமிழ்நாடு மின்சாரவாரியம் கால் மேல் கால் போட்டுக்கொண்டு மெத்தனமாக உட்கார்ந்து இருந்திருக்கிறது.
மூன்று மாத காலமாக ஆபத்தை விளைவிக்கும் விதமாக சாலைகளில் கிடந்த மின்சார வயர்களை பூமிக்குள் புதைக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில், ‘’உங்கள் சொந்த செலவில் புதைத்துக் கொள்ளுங்கள்’’ என்று மின்சார வாரிய அதிகாரிகள் மெத்தனமாக கூறியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் அப்பகுதி மின்சார வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. இந்த கொடூர மரணத்துக்கு மின்சாரவாரிய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அரசு நிவாரணம் வழங்கியிருக்கிறது. மொத்த நிவாரண தொகையையும் பொறுப்பிலிருந்த அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். மின்சார விநியோகம் சார்ந்த எந்தமாதிரியான குறைபாடுகளை கூறினாலும் அசட்டை செய்வது மின்சாரவாரிய அதிகாரிகளின் வழக்கமாகி விட்டது. மின்சாரவாரியத்தின் மெத்தனப்போக்கு தூய்மைப்பணியாளராக பணியாற்றி தான் குடும்பத்தை காப்பாற்றி வந்த ஒரு பெண்மணியின் குடும்பத்தையே அனாதையாக்கியிருக்கிறது.
அரசாங்கம், எப்போதுமே வரலட்சுமிகளின் சாவுக்கு நிதிஉதவி அளித்துவிடும். அடுத்தடுத்து இதுபோல வரலட்சுமிகள் சாகாது இருக்க என்ன தீர்வு என்பதை மட்டும் எப்போதுமே கண்டுபிடிப்பது இல்லை. மின்சாரம் போன்ற ஆபத்தான துறைகள் வாயிலாக பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் அந்த துறையின் உயர் அதிகாரிகள் வரை அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இந்த மூன்றுநாள் தொடர் மழையின் போதும், ‘’ஊர் நாறிவிடக்கூடாதே’’ என்ற அடிப்படையில் சென்னை மாநகராட்சி 13 வது மண்டலத்தில் கண்ணகி நகர் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப்பணியாளர் வரலட்சுமி அதிகாலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த மரணம் எதேற்சையாக நடந்த விபத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. முழுக்க முழுக்க மின்சார வாரியத்தின் மெத்தனப்போக்கால் ஏற்பட்ட மரணம். இனி வரவிருக்கும் மழைக்காலங்களில் எத்தனை மரணங்கள் நிகழுமோ.? என்ற பேரச்சத்தை இச்சம்பவம் வாயிலாக மின்சாரவாரியம் ஏற்படுத்தியுள்ளது.
வரலட்சுமியின் மரணம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வரலட்சுமியின் மரணத்திற்கு தமிழக முதல்வர் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சார்பில் 10 லட்சமும் உட்பாசர் ஒப்பந்ததாரர்கள் அமைப்பின் சார்பில் 10 லட்சமும் மொத்தமாக 20 லட்சம் வழங்கிட உத்தரவிட்டார்.
இரண்டு குழந்தைகளின் எதிர்கால கல்வி செலவை திமுக கழகம் பொறுப்பேற்றுக் கொள்கிறது. இரு குழந்தைகளும் விரும்புகிற வரை உயர்கல்வி, கல்லூரி என்கிற வகையிலான கல்வி செலவை திமுக பொறுப்பேற்றுக்கொள்ளும் என குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளோம். தூய்மை பணியாளரின் இறுதி சடங்கு செலவை சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
உயிரிழந்த பெண்ணின் கணவா் உடல் பாதிப்பு உள்ளவர் அவருக்கான சிகிச்சையை அரசு மேற்கொள்ளும். கணவருக்கும் உபாசா ஒப்பந்ததாரர்களிடம் இலகுவான வேலையை தர வேண்டும் என சொல்லியிருக்கிறோம்.‌ மாநகராட்சி துணை ஆணையர் வேண்டுகோளை ஏற்று அந்த நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
தவறுக்கு நான் சப்பைகட்டு கட்டவில்லை. சம்பந்தப்பட்ட ஆணையரிடம் பேசி இருக்கிறேன். விரைவில், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர் தலைமையிலான அலுவலர்களையும் நகராட்சி ஆணையர் தலைமையிலான அலுவலர்களையும் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலர்களையும் இணைத்துக் கொண்டு இந்த குடியிருப்பில் மின் இணைப்பு சம்பந்தப்பட்ட பணிகளுக்கு இவர்கள் சொன்ன குறையை மனதில் வைத்துக்கொண்டு விரைவில் ஒரு கூட்டு ஆய்வை நடத்தி இங்கே உள்ள குறைகள் தீர்க்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். மேலும் 20 லட்சத்திற்கான காசோலையை வரலட்சுமியின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இந்தச் மரண சம்பவம், நகர மழைநீர் மேலாண்மை மற்றும் மின்சார பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. மின்சார வாரியம் தனது மெத்தனப்போக்கை கைவிடவேண்டும். இல்லையெனில் மரணங்கள் தொடரும் என்பதை வரலட்சுமியின் மரணம் உணர்த்தியிருக்கிறது. அரசும் அதிகாரிகளும் உணர்ந்தால் சரி.


banner

Related posts

ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் – திட்டவட்டமாக கூறிய ராமதாஸ்

Ambalam News

முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடியே நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

Admin

தவெக மாநாடு : மேடையில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் சரத்குமார் பெரம்பலூர் எஸ்.பி அலுவலகத்தில் பவுன்சர் மீது புகார்

Ambalam News

Leave a Comment