டெல்லியில் தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக விலங்கு நல ஆதரவாளர்கள் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், வழக்கு விசாரணை 3 நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதிகள் விக்ரம்நாத், சந்திப்மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
விலங்கின ஆர்வலர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், “இந்த விவகாரத்தில் நோட்டீஸ் எதுவும் அனுப்பாமலும், உரிய விசாரணை எதுவும் நடத்தாமலும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க கூடாது” என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் முன் வைத்தனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் மேம்போக்கான வாதங்களை முன்வைக்க வேண்டாம். உங்களிடம் ஆதாரங்கள் உள்ளதா,.? அப்படி இருந்தால், இங்கே வாதங்களை முன்வைக்கலாம். டெல்லி அரசின் செயலற்றதன்மையால் தான் இந்த நிலை உருவாகி உள்ளது.
தெரு நாய் விவகாரத்தில் சட்டங்கள் உருவாக்கப்பட்டு, ஆனால் அவை அமல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாகதான் பிரச்னை உருவாகி உள்ளது. தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்கனவே விதிமுறைகளும், சட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படுவது இல்லை. ஒரு பக்கம் மனிதர்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இன்னொரு பக்கம் விலங்குகள் நல ஆர்வலர்கள் தெருநாய்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
மத்திய மாநில அரசுகள் தெருநாய்கள் குறித்து இதுவரை மெத்தனப்போக்கையே கடைபிடித்து வந்திருக்கின்றனர் என்பதை நீதிமன்றம் தனது கருத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தெரு நாய்கள் குறித்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. தெருநாய்களால் விபத்து மற்றும் தாக்குதல் நடக்கும்போது மட்டுமே கண்துடைப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருவது தொடர்கதையாகிறது. விலங்கு நல ஆர்வலர்கள் அரசை எதிர்த்து போராட முன்வருவதில்லை, மாறாக இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த வழக்குகளில் கருத்து தெரிவிப்பதோடு, தங்கள் ஆர்வத்தை தூக்கியெறிந்து விடுகின்றனர் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Related posts
Click to comment