சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாக இளைஞர் அஜித்குமார் பணியாற்றி வந்தார். கோவிலுக்கு வந்த நிகிதா தனது காரை பார்க்கிங் செய்ய, அஜித் குமாரிடம் கார் சாவியை கொடுத்ததாகவும், காரில் இருந்த 10 சவரன் நகையை காவலாளி அஜீத் திருடி விட்டதாக போலீசில் புகார் அளித்தார்
இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சொல்லி தலைமைச் செயலகத்தில் உயரதிகாரியாக பணியாற்றும், ‘’ஒரு சார்’’ போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, அதன் பேரில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட அஜீத்குமார் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொல்லப்பாட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் காவல் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, தனிப்படை போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசாரை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், காரில் வைத்திருந்த நகை மாயமானதாக நிகிதா புகார் அளித்திருந்த நிலையில், நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர், இந்த விவகாரத்தில், கோவில் பார்க்கிங்கை விட்டு நிகிதாவின் கார் வெளியே செல்லவே இல்லை. அஜித்குமார் மீது நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணையில், நிகிதா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததும் தெரிய வந்துள்ளது.
வீல்சேர் தள்ள நிகிதாவிடம் அஜீத்குமார் 500 ரூபாய் கேட்டதாகவும், அதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், அப்போது ‘’உன்னை என்ன செய்கிறேன் என்று பார்’’ என்று நிகிதா கூறியதாக,சிலர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.