காஞ்சிபுரம் மாவட்டம். உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் கிராமத்தில் இருந்து, மலையாங்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர், பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதேபோல, திருமுக்கூடல், மதுார், சிறுதாமூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் கல் குவாரி மற்றும் கிரஷர்களின் வாகனங்களும், இவ்வழியே தினமும் சென்று வருகின்றன.
அவ்வாறு செல்லும் வாகனங்கள் தார்ப்பாய் மூடாமல் ஜல்லி மற்றும் எம்.சான்ட் மணல் ஆகியவற்றை ஏற்றிச் செல்கின்றன. அப்போது, வேகமாக செல்லும் லாரிகளில் இருந்து ஜல்லிகள் கீழே சிதறுகின்றன. லாரிகளில் இருந்து சிதறிய ஜல்லிகள் சாலையிலே கிடப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், நிலைத்தடுமாறி விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. குவாரிகளில் இருந்து அதிக அளவு ஜல்லி ஏற்றிக் கொண்டு, தார்ப்பாய் மூடாமல் இயக்கப்படும் லாரிகள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, தார்ப்பாய் மூடாமல் ஜல்லிகள் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நாகராஜன்