மு. க.ஸ்டாலின்- ஓ.பி.எஸ் திடீர் சந்திப்பு… தேசிய ஜனநாயக கூட்டணி உறவு முறிந்தது – பண்ருட்டி ராமச்சந்திரன்


அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட முறையில் மு. க. ஸ்டாலிடம் ஓபிஎஸ் நேரடியாக நலம் விசாரித்தது ஆரோக்கியமான அரசியலின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் பாஜக-அதிமுகவினரிடம் இந்த சந்திப்பு பேசுபொருளாகி இருக்கிறது.
கடந்த ஜூலை 21-ம் தேதி காலை நடைபயிற்சியின்போது தலைச்சுற்றல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையில், மருத்துவமனை யில் இருந்தபடியே அவர் அரசுப் பணிகளை மேற்கொண்டார்.
பிறகு உடல் நிலை சரியான நிலையில், கடந்த ஜூலை 27-ம் தேதி முதல்வர் வீடு திரும்பினார். பின்னர் சில தினங்கள் வீட்டில் ஓய்வில் இருந்த முதல்வர் ஸ்டாலின் இன்று அடையாறு தியோசோபிகல் சொசைட்டி பூங்காவில் வழக்கம் போல காலை நடைப்பயிற்சிக்கு சென்றார்.
அப்போது அங்கு நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அரசியல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுமார் 2 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை கொண்டிருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொண்டது.
அடுத்ததாக, தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விரைவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். மூன்றாவதாக, தேர்தலில் இப்போதைக்கு நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. எதிர்காலத்தில் அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது”என்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கங்கைகொண்ட சோழபுரம் நிகழ்ச்சிக்கு தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்காததால் ஓபிஎஸ் தரப்பு பாஜக மீது வருத்தத்தில் இருந்தது குறிப்பிடதக்கது.
தற்போது மு. க. ஸ்டாலின் உடனான சந்திப்பும் ஓபிஎஸ் தரப்பின் தேசிய ஜனநாயக கூட்டணி முறிவு அறிவிப்பும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


banner

Related posts

என்கவுண்டர்: எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை… கொலையாளியை என்கவுண்டர் செய்தது போலீஸ்

Ambalam News

அடித்து ஆடும் செங்கோட்டையன்.. ஆதரவுக்கரம் நீட்டும் ஓபிஎஸ் – டிடிவி. தினகரன் – சசிகலா..

Ambalam News

தனிப்படைகளை கலைக்க.? போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு!

Admin

Leave a Comment