தமிழகத்தில் இன்னும் எட்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறார். பிஜேபி ஆதரவு நிலைப்பாடு உட்கட்சி பூசல் மதுரை முருகன் மாநாடு ஆதரவு விவகாரம் போன்ற பிரச்சனைகள் அதிமுகவின் வாக்கு வங்கியை சரித்திருக்கிறது. ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் அதிமுகவுக்குதான் வாக்கு வங்கி அதிகமாக இருந்தது. அவருக்கு பின்னர் வந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்த காலத்தில் அதிமுக தலைமையின் போக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வாக்கு வங்கி வெகுவாக சரிந்து விட்டது என்றே கூறலாம்.

கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு அதிமுக தொண்டர்களில் அதிருப்தியும் சோர்வும் காரணமாக அமைந்தது. தறப்போதும் அதிமுக தலைமையின் கூட்டணி கணக்குகள் அதிமுகவினரை சோர்வடைய செய்துள்ளது. இவற்றையெல்லாம் அறிந்தே அதிமுக தொண்டர்களின் சோர்வை நீக்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி தேர்தல் களத்திற்கு முழு வேகத்தில் அவர்களை தயார்படுத்தும் விதமாக இந்த சுற்றுப்பயணத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமித்திருப்பதாக தகவல்கள் கசிகிறது.
ஜூலை 7ம் தேதி தொடங்கி, 21ம் தேதி வரை எடப்பாடி சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் 34 தொகுதிகளில் மக்களையும் கட்சியின் நிர்வாகிகளையும் சந்திக்கிறார். சென்டிமென்டாக கொங்குமண்டலத்தின் பீடமான கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
கோவையில் தொடங்கும் பயணம் கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் என மொத்தம் 7 மாவட்டங்களில் நீள்கிறது. டெல்டா மாவட்டங்களில் அதிமுகவுக்கு என பெரியதாக வாக்கு வங்கி இல்லாத நிலையை கருத்தில் கொண்டு சுற்றுப்பயணத்தின் முதல் சுற்றில் டெல்டா மாவட்டங்களை குறிவைத்து களமிறங்கி இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
கொங்கு மண்டலம் முழுவதும் இரண்டாவது முறையாக சுற்றுபயணம் செய்யும் பிரமாண்ட திட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.