திமுக சி. பி. ஐ (எம்) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏறப்பசட்டஸ் இழுபறி காலதாமதம் போன்றவை இரு கட்சிகளையிடையே புகைச்சாலை கிளப்பியிருக்கிறது. திமுகவால் காங்கிரஸ், தேமுதிகவிற்கு அதிக தொகுதிகளை கொடுக்க முடியும் போது எங்களுக்கு மட்டும் முடியாது என சொல்வது நியாயம் அல்ல என சென்னை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான காய்நகர்த்தல்கள் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட மனகசப்புகளை கடந்து ஒருவழியாக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளுக்கும் திமுக-வுக்கும் இடையே தொகுதி எண்ணிக்கையில் சிறுசிறு மனக்கசப்புகள் உருவாகத் தொடங்கியுள்ளன.
சிபிஎம், சிபிஐ-யிடம் திமுக கறார் காட்டி வருவதாக கூறப்பட்ட நிலையில், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் , கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே ஏற்கனவே இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தன. இதில் சுமுக முடிவு எட்டப்படாத நிலையில், இன்று மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், நாளை தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், இன்றைய பேச்சுவார்த்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினார். அவர் கூறுகையில், “இன்றைய பேச்சுவார்த்தை போராட்டத் தயாரிப்புப் பணிகளுக்காகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இந்த முறை இரட்டை இலக்கத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதையே பேச்சுவார்த்தைக் குழுவிடமும் வலியுறுத்தியுள்ளோம்,” என்றார்.
திமுக தரப்பில், “புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால், நீங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குவது கடினம்” என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பெ. சண்முகம், “கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வந்தாலும், இதே நெருக்கடிக்கு மத்தியில்தான் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தேமுதிக-வுக்கும் அதிக இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. அவர்களுக்கு இடங்கள் கிடைக்கும்போது, நீண்டகால நட்பு சக்திகளான இடதுசாரி கட்சிகளுக்கு இடமில்லை என்று சொல்வதில் நியாயமில்லை,” எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் விருப்பத்தை திமுகவின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் இது குறித்து கட்சித் தலைமையிடம் ஆலோசித்து முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இடதுசாரிகளின் இந்தத் திட்டவட்டமான முடிவு திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுமா.? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்கின்றனர் சி. பி. ஐ. (எம் ) தொண்டர்கள்.

