விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் பொன்னுப்பாண்டியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசுகள் தயாரித்தபோது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 2 மூதாட்டிகள் உள்பட 3 பேர் உடல் கருகி பரிதாபமாக இன்று உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய விஜயகரிசல்குளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பொன்னுபாண்டியன். இவர் வீட்டில் அனுமதியின்றி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில் பட்டாசுகள் வெடித்துச் சிதறி தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த பாண்டியத்தேவர் மனைவி முத்துலட்சுமி (70) கீழக்கோதை நாச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன் (20) பாண்டி என்பவரின் மனைவி சண்முகத்தாய் (60) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வெடி விபத்தில் பலத்த காயமடைந்த ராஜபாண்டியன் மனைவி மாரியம்மாள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் பொன்னுப்பாண்டியனை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே, 2024 பிப்ரவரி 14 அன்று விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் நடந்த வெடிவிபத்தில் 10 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்தால், இது போன்ற விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாரியம்மாள் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் போது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Related posts
Click to comment