வழக்கு முடியும் வரை செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராகக் கூடாது– உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்…
அமைச்சரானால் ரத்து செய்ய விண்ணப்பியுங்கள் – நீதிபதி
திமுக அமைச்சரவையில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராகவும் திமுகவில் அதிகாரம் மிக்க நபராகவும் வலம் வந்தவர் செந்தில் பாலாஜி
அவர், 2011-2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். சூலை 2015ல் அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டார்.,
இவர் அமைச்சராக இருந்த போது 2014-15ம் ஆண்டில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொறியாளர்கள் உட்பட 81 பதவிகளுக்கு பணி நியமனம் செய்ய தனது தம்பி அசோக் குமார் மற்றும் நேர்முக உதவியாளர் சண்முகம் மூலம் 1.62 ரூபாய் கோடி கையூட்டுப் பணம் பெற்றார். தேவசகாயம் என்பவரின் மகனுக்கு பேருந்து நடத்துனர் பணிக்காக ரூபாய் 2,60,000 பணத்தைப் பெற்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இலஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
பாதிக்கப்பட்ட மற்றொருவர் 2016ஆம் ஆண்டு அளித்த புகாரின்படி, அமைச்சரின் சகோதரர் அசோக்குமார் மற்றும் மைத்துனர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ரூபாய் 2.31 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஏப்ரல் 2019ல் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது வேலை வாங்கி தருவதாக 40 இலட்சம் ரூபாய் வசூலித்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

2021 ல் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் வேலைக்கு லஞ்சமாக பணம் வாங்கியது தொடர்பான சர்ச்சையை சமரசமாக தீர்த்து விட்டதாகக்கூறி அவர்கள் ஒரு கூட்டு மனுவை தாக்கல் செய்தனர். சமரசம் மற்றும் சண்முகம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் 30 ஜூலை 2022 அன்று செந்தில் பாலாஜி மீதான குற்ற வழக்கை ரத்து செய்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் டிசம்பர் 1, 2022 அன்று மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும் தனக்கு அரசு வேலை வழங்காமல், லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க தகுதிப் பட்டியலில் சேர்த்திருந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மற்றும் அமைச்சரின் தனி உதவியாளர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட ஊழல் வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தலைமை நீதிபதி என். வி. இரமணா நீதிபதிகள் ஹிமா கோலி, போபண்ணா, ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி, 2023 ல் விசாரித்தது இவ்வழக்கை இரண்டு மாதங்களுக்குள் முதலிருந்து விசாரிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜி தொடர்பான இந்த வழக்கில் அமலாக்க துறை தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்து கொள்ள நீதிமன்றத்தில் மனு செய்தது. இதனை சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது. அமலாக்கத் துறை, உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து செப்டம்பர், 2022ல் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறையும் சேர்ந்து விசாரிக்க அனுமதியை பெற்றது.
ஜூன் 13 2023 அன்று பண மோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையிட்டு, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். ஜூன் 14, 2023 அன்று அதிகாலையில் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டார். அச்சமயம் நெஞ்சு வலியால் அவர் அவதிபட்டதால், அரசு மருத்துவமனையிலும் அதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சை முடிந்த பின் ஜூலை 17, 2023 அன்று செந்தில் பாலாஜியை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 55 நாள் நீதிமன்றகாவலில் இருந்த செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் ஆகஸ்டு 7, 2023 அன்று 5 நாள் விசாரணைக்கு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.
வழக்கின் நீட்சியாக, இந்த சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சுமார் ஒன்றரை வருட சிறைவாசத்துக்குப் பின் கடந்த 2024 செப்டம்பர் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது

சிறையில் இருந்து வெளியே வந்த மூன்றே நாட்களில் குறிப்பாக செப்டம்பர் 29 ஆம் தேதி செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியது. இச்சூழலில் வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்து கொண்டு சாட்சியங்களை கலைக்க முயல்கிறார் ஆகவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் முறையிடு ஒரு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கிலும் அமலாக்கத்துறை இணைந்து கொண்டு செந்தில்பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது.
இவ் வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள். செந்தில்பாலாஜி மீது கடுமையான அதிருப்தி தெரிவித்தனர். செந்தில்பாலாஜி தனது அஃபிடவிட்டில், ‘ஜாமீன் நிபந்தனையில் அமைச்சராக பதவியேற்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், ஏப்ரல் 23, 2025 ம் தேதி உச்ச நீதிமன்றம், ‘செந்தில்பாலாஜிக்கு மெரிட் படி அல்ல. ஜாமீன் வழங்க வில்லை விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டாம் என்ற அடிப்படையில்தான். ஜாமீன் வழங்கும்போது செந்தில்பாலாஜி அமைச்சராக இல்லை. ஆனால் இரண்டே நாட்களில் அமைச்சராகிவிட்டார் என்றால் அவர் என்ன சொல்ல வருகிறார்? செந்தில்பாலாஜி அமைச்சராக இருக்க விரும்புகிறாரா? அல்லது ஜாமீனில் வெளியே இருக்க விரும்புகிறாரா? ஏப்ரல் 28 ஆம் தேதி பதில் சொல்லுங்கள்” என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக ரியாக்ட் செய்தது.
28 அன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில்பாலாஜி ராஜினாமா செய்த தகவலை செந்தில்பாலாஜி தரப்பில் எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் “இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை பாலாஜி மீண்டும் அமைச்சராகக் கூடாது என நிபந்தனை விதிக்கவேண்டும்” என்று உச்க நீதிமன்ற நீதிபதிகள் அமர்வை வலியுறுத்தினார்.

மேலும், சொலிசிட்டர் ஜெனரல். ”அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில், இதே போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தகைய நிபந்தனையை நீதிமன்றம் தற்போது விதிக்காவிட்டால், ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் செந்தில்பாலாஜி அமைச்சராகிவிடுவார்” என்று கூறினார்..
அப்போது நீதிபதி ஓகா அவர்கள், “செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராவார் என்பது உங்கள் அச்சமா? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்த கட்டத்தில், ஜாமீனை ரத்து செய்ய நீங்கள் விண்ணப்பிக்கலாம்,” என்று பதிலளித்தார்.
மீண்டும் சொலிசிட்டர் ஜெனரல் “செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோதே, இலாகா இல்லாத அமைச்சராக இருந்தவர். அவர் மீதான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கில் மாநில அரசுதான் ப்ராசிக்யூசன் தரப்பாக இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியின் செல்வாக்கு தொடரும்” என்று வாதிட்டார்.
அப்போது, “செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதால், உங்கள் விண்ணப்பத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை” என்று நீதிபதி ஓகா என்று கூறிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து விடாப்பிடியாக, சொலிசிட்டர் ஜெனரல் செந்தில்பாலாஜி அந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துகிறார்” செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை வேகப்படுத்தும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், என்ற கோரிக்கையை வைத்தார்.
செந்தில்பாலாஜி தரப்பின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சொலிசிட்டர் ஜெனரலின் வாதத்தை மறுத்தார்.
இறுதியில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காமல் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது