காஷ்மீர் என்ற வெண்பனி போர்த்திய எழிலரசி உலகையே தனது இயற்கை வாசீகரத்தால் கவர்திழுத்தாலும் தீவிரவாதிகள் நடத்திய கோரத்தாண்டவமும் படுகொலைகளும் மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளும் அந்த வெண்பனி மலைகள் மீது ரத்த சரித்திரமாக பொறிந்து கிடக்கிறது.. என்று அடங்குமோ? இந்த கோரத் தாண்டவங்கள் என்ற ஏக்க பெருமூச்சு விடுவது காஷ்மீர் மக்கள் மட்டுமல்ல இயற்கையை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனும் தான்.

காஷ்மீர் விவகாரத்தில், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலை தான் இன்று வரை தொடர்கிறது. மதவாத அரசியலின் மையப்புள்ளியாக ஆகப்பட்டிருக்கிறது காஷ்மீர்
2019 – ல் பா.ஜ.க.ஒன்றிய அரசு காஷ்மீரின் சிறப்பு தகுதியை ரத்து செய்து யூனியன் பிரதேசமாக சுருக்கி ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்ததோடு காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டது, தீவிரவாதத்தை ‘ இரும்புக் கரம் கொண்டு ’ அடக்கிவிட்டோம் , ஊழலையும், குடும்ப அரசியலையும் வேரறுத்து புதிய காஷ்மீரை மோடி உருவாக்கி விட்டோம் என்று பா.ஜ.கவினர் கொக்கரித்தனர்.

இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று எண்ணியது. தேர்தலையும் நடத்தியது ஆனால் காஷ்மீர் மக்கள் பாஜகவை நாடாளுமன்ற தேர்தலிலும், சட்ட மன்ற தேர்தலிலும் தோற்கடித்தனர்.
ஆனால், தேர்தலுக்கு பின்னரும் அதிகாரங்கள் அனைத்தையும் இன்றும் துணை நிலை ஆளுனர் வசமே உள்ளது. சுருக்கமாக சொல்வதென்றால் அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசிடமே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தீவிரவாத தாக்குக்குதல் குறித்து அறியாமல் கோட்டை விட்டது ஒன்றிய அரசின் உள்துறை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய் கிழமை மதியம் தீவிரவாதிகள் சுற்றுலாவுக்கு வந்தவர்களில் மகளிர் குழந்தைகளை ஒதுக்கிவிட்டு ஆண்களை மட்டும் குறி பார்த்து சுட்டு கொன்றுள்ளனர். சுற்றுலா பயணிகளின் அடையாள அட்டையை சோதித்த பின்னரே பலரும் சுடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அப்பாவி சுற்றுலா பயணிகளை பதுங்கியிருந்தும் பிறகு அருகாமையில் வந்தும் சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் உள்ளூர் இஸ்லாமிய சுற்றுலா பணியாளர்களையும் சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடி உள்ளனர்.
சுடப்பட்டவர்களில் ஏழு பேருக்கும் மேலானவர்கள் காஷ்மீரில் பணியாற்றும் உளவுத் துறையை சேர்ந்தவர்கள் என்பது கூடுதலான அதிர்ச்சியான அவலமான தகவலாக அதிர்ச்சியூட்டியிருக்கிறது..

மேலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடுமிடமான பஹல்காமில் – அமர்நாத் யாத்திரை வழித்தடத்தில்- ட்ரெக்கிங்கிற்கு பெயர்பெற்ற இப்பகுதியில் இந்த தீவிரவாத தாக்குதல் அரங்கேறி இருப்பது இந்திய மக்களை மட்டுமின்றி உலக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நாட்டின் உள் நாட்டு பாதுகாப்பை மட்டுமின்றி, காஷ்மீர் பிரதேச காவல் துறையையும் தன் பொறுப்பில் வைத்துள்ள உள்துறை அமைச்சர் அமீத் ஷா இத்தகைய தீவிரவாத தாக்குதல் குறித்து இதுவரை தெளிவு படுத்தவில்லை.
இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று தி ரெஸிஸ்டன்ஸ் பிரண்ட்(The Resistance Front)என்ற இயக்கம்செவ்வாயன்று ஒரு அறிவிப்பை X தளத்தில் பதிவிட்டு இருந்தது, பின்னர் அவ்வறிவிப்பு விலக்கி கொள்ளப்பட்டாலும், இந்திய அதிகாரிகள் டி ஆர் எஃப்(TRF) என்பது லஷ்கர் ஈ தாய்பாவின் துணை அமைப்பே என்றும் அவ்வமைப்பை 2023ல் இந்திய அரசு தீவிரவாத இயக்கமென தடை செய்திருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வமைப்பு, இந்திய அரசு கிட்டத்தட்ட 85,000 வெளி ஆட்களை காஷ்மீரில் வலிந்து குடியமர்த்தி அவர்களுக்கு குடியுரிமையும் வழங்கியிருக்கிறது, இதன் மூலம் காஷ்மீரின் மக்கள் தொகுப்பை (demography) மாற்ற இந்திய அரசு முயல்கிறது’ என குற்றஞ்சாட்டி உள்ளது குறிப்பிடதக்கது. இது போன்ற தீவிரவாத இயக்கங்களை கண்காணிக்காமல் கோட்டை விட்டிருக்கிறது ஒன்றிய அரசின் உள்துறை.

பிரதமர் மோடியும் , பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ’இந்த ஈனச்செயலை புரிந்தவர்கள் தப்ப முடியாது என்றும், அவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் பதிலடி உறுதியாகவும் உரத்தும் இருக்கும்’ என்று கூறியுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிகழும் பதற்றம் நாட்டின் நிம்மதியை சீர்குலைத்துள்ளது.
அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் இந்தியா வந்திருக்கும் பொழுது நடந்திருக்கும் இந்த தீவிரவாத தாக்குதல் உலகையே அச்சுறுத்தி இருக்கிறது..

பாகிஸ்தான் பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருக்கிறது பாகிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் அரசு மீது வெறுப்பில் இருக்கிறார்கள். அதனால் போருக்கோ பதிலடி தாக்குதலுக்கோ? இதுதான் சரியான நேரம் என்று பா.ஜ.க. வின் ஒன்றிய அறுசு கருதுமானால், நமது பொருளாதாரம் எப்படி இருக்கிறது? ராணுவத்தின் நிலை என்ன? என்பதை அறிந்து இந்த தாக்குதலை வைத்து அரசியல் செய்வதை தவிர்த்து விவேகமாக செயல்படவேண்டும் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.