மண் கடத்தல் லாரிக்கு லஞ்ச பேரம் பேசிய டிஎஸ்பி:
காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடித்த ஐஜி அஸ்ராகார்க்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் லாரிகள் மூலம் தொடர்ந்து மண் கடத்தல் நடப்பது தொடர்கதையாகி வருவது அப்பகுதி மக்கள் அறிந்த ஒன்றுதான். ஆனால் கடத்தல் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது எழுந்து வந்தது. குறிப்பாக வருவாய்துரை அதிகாரிகள் மண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்து வருகின்றனர் குறிப்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கடத்தல்காரர்களுக்கு புகார் குறித்து தகவல் தெரிவித்து உஷார் படுத்தி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உலவி வந்தது. பகுதி மக்களின் சந்தேகங்களை உறுதிபடுத்தும் விதமாக காவல்துறை உயர் அதிகாரியின் லஞ்ச பேர ஆடியோ ஒன்று வெளியாகி மாவட்டத்தையே பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது.

மண் கடத்தல்காரர்களுடன் டிஎஸ்பி பிரதீப் லஞ்ச பேரம் பேசிய ஆடியோ அப்பகுதி மக்களின் வாட்ஸப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது
அதில், ‘லாரிகள் மூலம் மண் அடித்தால் ரூபாய் 4,000 என்பது குறைவு என்றும், ஒரு நாளைக்கு 3 வண்டி என செல்வார்கள். ஆனால், அதிக அளவில் வண்டிகள் மூலம் மண் அடிப்பார்கள். அதனால் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பிக்கு ரூபாய் 5,000 என பேரம் பேசி வாங்கித் தரவேண்டும்’ என்று உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பேசுகின்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு லாரிக்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என மணல் கடத்தல்காரர்களுடன் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் பேரம் பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தை தொடர்ந்து இந்த விவகாரம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் அவர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது ஐ.ஜி. அஸ்ராகார்க் அவர்கள் டிஎஸ்பி பிரதீப் மீது நடவடிக்கை எடுத்ததோடு அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கி அடித்துள்ளார்.
மாவட்ட காவல்துறை அதிகாரிகளில் பலர் இந்த மண் கடத்தல்காரர்களிடம் கூட்டணி வைத்து கொள்ளை அடித்தது அம்பலமாகி உள்ளது.
அரசுக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் எப்போதும் எங்களால் தலைவலி தான் என்பதை அவ்வப்போது அடிமட்ட காக்கிகள் நிரூபித்து விடுகின்றனர்.
-செல்வம்